பெரம்பலூர் அருகே கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் ?

பெரம்பலூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டைகள் பற்றிய பேச்சு தான் சமூக வலைத்தளத்தில் தற்போதைய ட்ரெண்டிங்.  தமிழ்நாட்டின் ‘ஜுராசிக் பார்க்’ பெரம்பலூர் என்ற ரீதியில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.மீம்ஸ் களும் பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர் பெரம்பலூர் வாசிகள்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குன்னம் கிராமத்தில் ஆனைவாரி ஓடை செல்லும் வழியில் உள்ள வெங்கட்டான் குளத்தில் அப்பகுதி மக்கள் வண்டல் மண் எடுத்தபோது உள்ளே புதைந்திருந்த டைனோசர் முட்டை மற்றும் கடல்வாழ் உயிரின படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் விவசாய பணிகளுக்காக பூமியை தோண்டும் போது இது போன்று வெள்ளை நிறத்தில் முட்டை வடிவிலான பாறைகள் கிடைக்கின்றது.இது டைனோசரின் முட்டைகளாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து  பார்த்து செல்கின்றனர்.இவைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த டைனோசர் ஆக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இது டைனோசர் முட்டை இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அங்கு கிடைத்த முட்டை வடிவிலான அவைகள் அம்மோனைட் (ammonite) உயிரினத்தின் படிவு என்பதை வல்லுநர்கள்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

நிபுணர் குழு உறுப்பினர்களில் ஒருவரான ரமேஷ் கருப்பையா கூறியதாவது, பெரம்பலூர்,அரியலூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகள் பல காலங்களுக்கு முன் கடற்பரப்பாக இருந்தது.அம்மோனைட் என்ற கடல் இனங்கள் 416 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகவும் தற்போது அவை அழிந்து விட்டதாகவும், அவற்றின் புதைபடிவ வடிவுகளே தற்போது முட்டை வடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.

அப்பகுதி மக்கள்  இதனை பாதுகாத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் கடல் பகுதியாக இருந்ததற்கான ஆதாரமாக சாத்தனூர் கிராமத்தில் கல்மரம் கண்டுபிடிக்கப்பட்டு, அருங்காட்சியகம் அமைத்து பாதுகாத்து வருகின்றனர் தொல்லியல் துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *