தடை வந்த போதிலும், எழுச்சி போராட்டம் நடத்தி வென்ற தமிழரின் பாரம்பரிய விளையாட்டு – ஜல்லிக்கட்டு

உழவு தொழிலுக்கு உதவி செய்யும் சூரிய பகவான், மாடுகள் மற்றும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் நாளாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் நெருங்கி கொண்டிருக்கிறது.பொங்கல் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு.தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் மிக பிரபலமானது ஜல்லிக்கட்டு.இந்த வீரவிளையாட்டை தடை செய்ய முயன்ற போது,இளையதலைமுறையினர் வெகுண்டெழுந்து நடத்திய மாபெரும் புரட்சியால் தடை நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டை மீட்டனர்.உலகமே இந்நிகழ்வினை உற்று நோக்க வைத்தனர், ஜல்லிக்கட்டின் புகழ் உலகமெங்கும் பரவியது.

பல வகையான ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் உள்ளன,

அவை ஏறு தழுவுதல் – காளையின் திமிலை பிடித்தபடி குறிப்பிட்ட தூரம் வரை செல்வதாகும்.

ஜல்லிக்கட்டு – ஜல்லி,சல்லி (நாணயங்கள்) மற்றும் கட்டு (பை) ஆகியவற்றிலிருந்து பெயர் பெற்றது.காளைகளின் கொம்புகளோட கட்டப்பட்டிருக்கும் பைகளில் நாணயத்தை வைத்திருப்பர்,யார் ஒருவர் அக்காளையை அடக்குகிறாரோ அவரே வெற்றியாளராக கருதப்பட்டு அந்த நாணய முடிச்சை எடுப்பர்.

வேலி விரட்டு என்பது எந்தவித எல்லையும் இல்லாமல் திறந்த வெளியில் கட்டவிழ்த்து விடப்பட்ட காளையை அடக்குவதாகும்.

வடம் மஞ்சுவிரட்டு என்பது காளை 50 ஆதி நீளக்கயிற்றில் கட்டப்பட்டு மைதானத்தில் சுதந்திரமாக திறந்துவிடப்படும். அரை மணி நேரத்திற்குள் அந்த மாட்டை அடக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகையினை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டு, மிக தொன்மையான விளையாட்டாகும்.

சிந்து சமவெளி நாகரிகத்தில் காளை-தட்டுதல் நடைமுறையை சித்தரிக்கும் ஆதாரங்கள் உள்ளது.1930 களில் ஹென்ஜோதாரோ அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது இது.தமிழ்நாட்டில் உள்ள கரிக்கியூர் என்னும் கிராமத்தில் 3,500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான பல பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன,அதில் காளைகளை ஆண்கள் அடக்குவது
போன்ற பாறை ஓவியங்கள் உள்ளன.இதுவே இதன் தொன்மையை பறைசாற்றுகிறது.சங்க இலக்கியத்திலும் ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள் உள்ளன.நாயக்க மன்னர்களின் காலத்திலிருந்தே ஜல்லிக்கட்டு இருப்பதாக நாட்டுப்புற கதைகள் சொல்கின்றன. இது தமிழர்களின் வீரவிளையாட்டாக உள்ளது.

காளையை அடக்குபவர்கே மகளை திருமணம் செய்து வைக்கும் வழக்கமும் அக்காலத்தில் இருந்துள்ளது.ஆண்களின் வலிமையை காண்பிக்கும் வழியாக ஜல்லிக்கட்டு விளையாட்டு இருந்துள்ளது.

மதுரையை அடுத்துள்ள அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.இதனை அடுத்து அவனியாபுரம், பாலமேடு, விராலிமலை ஜல்லிக்கட்டுக்கள் போன்றவை புகழ் பெற்றவையாகும்.

பொங்கலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு,தற்போது பொங்கலின் முதல்நாளில் கூட நடத்தப்படுகிறது.இப்போட்டியினை பார்க்க ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர்,மக்கள் நேரலையிலும் ஜல்லிக்கட்டினை காண ஆர்வம் காட்டுகின்றனர் .

விலங்குகள் மீதான கொடுமை மற்றும் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் (PETA) உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.இந்த விளையாட்டின் மூலம் காளைகள் காயம் அடைகின்றன, சில சமயங்களில் இறக்கவும் நேர்கின்றது.காளையை அடக்குபவர்களும் படுகாயம்
அடைந்து தங்களது உயிரை இழக்கின்றனர்.சில நேரங்களில், பார்வையாளர்கள் கூட காயமடைகிறார்கள் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

மிருகவதை என்னும் பெயரில் அப்படியான விளையாட்டுகள் கூடாது என்று கூறுகிறார்கள் விலங்கு ஆர்வளர்கள்.ஆனால் ஜல்லிக்கட்டில் மிருகவதை என்ற சொல்லுக்கே இடமில்லை.வடிவாசலில் இருந்து பதினைந்து முதல் இருபது அடி வரை அதன் திமிலை பிடித்து சென்றால் அவன் காளையை அடக்கியவனாவான்.இரண்டு நிமிடங்களில் முடியக்கூடிய இந்த விளையாட்டில் மிருகவதை எங்கே இருக்கிறது என்று ஜல்லிக்கட்டு ஆர்வளர்கள் கூறுகிறார்கள்.ஸ்பெயின்,துருக்கி போன்ற நாடுகளிலும் காளைகளை வைத்து விளையாடும் இதுபோன்ற வீரவிளையாட்டுகள் விளையாடப்படுகின்றன.இந்த விளையாட்டுகளில் காளைகளை கொன்று வீழ்த்துவதே குறிக்கோளாகும்.ஆனால் நமது ஜல்லிக்கட்டில்  சில நொடிகளே காளைகளை அடக்குகிறோம்,தகுந்த பாதுகாப்புகளோடு விளையாடப்படுகிறது  ஜல்லிக்கட்டு.

கிராமப்புற பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.இந்த தடையை எதிர்த்து 2017 ஜனவரியில் தமிழகம் முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.சென்னையின் மெரினா கடற்கரையில் 15 நாள் ஜல்லிக்கட்டு சார்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், விலங்கு உரிமை
ஆர்வலர்கள் மற்றும் தமிழ் திரையுலக உறுப்பினர்கள் உட்பட கலாச்சார பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறி பரவலான மக்கள் பங்கேற்பைத் தூண்டியது இந்த போராட்டம். ஜல்லிக்கட்டு போராட்டம்,இந்த விளையாட்டின் வரலாறு குறித்த தேடலை தூண்டியது.இந்த போராட்டத்திற்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகங்களிடமிருந்தும் சர்வதேச ஆதரவு கிடைத்தது.போராட்டத்தில் மாணவர் இயக்கம் நடத்தியதாக கூறப்பட்டாலும், இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள், கல்வியாளர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள், பாதுகாப்பு ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், தினசரி கூலி தொழிலாளர்கள் என ஏராளமான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து தலைநகருக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தைஆதரித்து தங்களை போராட்டத்தில் இணைத்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழகம் முழுவதும் நடந்த  போராட்டங்களுக்கு பிறகு தமிழக சட்டமன்றக் கூட்ட தொடரில் அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கியது தமிழக அரசு.அதன் பிறகு ஜல்லிக்கட்டு பல இடங்களில் மக்கள் உற்சாகத்துடன் நடத்தி மகிழ்ந்தனர்.நமது நாட்டின் கலாச்சாரம், நமது பாரம்பரிய வீரவிளையாட்டை மீட்டெடுத்த பெருமையை பெற்றுள்ளனர் தமிழர்கள் என்பதில் நாமும் பெருமை கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *